முதல் பக்கம்

Friday, February 19, 2010

தமிழில் எழுதிட


பல நண்பர்கள் வலைப் பக்கங்களையும் மின்னஞ்சல்களையும் தமிழில் எப்படி எழுதுவது என்று கேட்கிறார்கள்.

1. நீங்கள் NHM Writer என்ற சிறிய Programme-ஐ(http://software.nhm.in/products/writer) என்றமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
. இது எளிதானது. இதன் உதவியோடு Windows Word உள்ளிட்ட எந்த பக்கத்திலும் தமிழில் எழுத முடியும்.

2. அல்லது கூகுளின் மொழிமாற்றல் பக்கத்தில் (
http://www.google.com/transliterate/Tamil) முதலில் எழுதி Copy, Paste செய்துகொள்ளலாம். இதற்கு நீங்கள் ஆன் லைனில் இருப்பது அவசியம்.

நீயின்றி நானில்லை


நேற்று மாலை ”நீயின்றி நானில்லை” (I can't live without you) என்ற தைவான் மொழிப் படத்தைப் பார்த்தேன்.

2009 கோவா திரைப் பட விழாவில் ‘தங்க மயில்’ விருது பெற்ற படம். திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.

லியோன் டே (Leon Dai) என்பவர் தைவானின் புகழ் பெற்ற நடிகராம். அவர் இயக்கிய படம் இது.

படம் முழுக்க ஒரு ஏழு வயது மகளும் அவளின் தந்தையும் தான். அவர்களின் அமைதியான வாழ்க்கயில் குறுக்கிடுகிறது சட்டம்.

ஒவ்வொரு காட்சியும் மனதை ஈர்த்தது.

மகளாக நடிக்கும் அந்தக் குழந்தையின் நடிப்பு அபாரம். தீர்க்க முடியாத சட்ட சிக்கலால் அவதியுறும் தந்தை அவளை அம்மாவோடு சென்று வாழச் சொல்லும் போது, அவள் காட்டும் முக பாவம் அருமை.

ஆக்ஸிஜன் குழாயோடு அவள் தந்தை கப்பலுக்கு அடியில் சென்று வேலை பார்க்கும் காட்சி இதயத் துடிப்பைக் கூட்டுகிறது என்றால், நீண்ட பயணத்தின் இடையில் வேலி ஓரத் தோப்பில் மாங்காய் பறித்து அவர்கள் சாப்பிடும் காட்சி கவிதை.

வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.



Thursday, February 18, 2010

பசியும் தமிழரும்

நம் முன்னோர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர் என்பது நம் நம்பிக்கை.

இலக்கியங்கள் முதல் இன்றைய மேடைப் பேச்சாளர்கள் வரை நம் மனதில் ஏற்படுத்தி இருக்கும் காட்சியும் அதுதானே!

உயர் நிலைப் பள்ளியில், தங்கத் தோட்டை வீசி தானியம் உண்ண வந்த கோழியை விரட்டிய பாடல் காட்சியைப் படித்தபோது ’ஆஹா’ என்று நீங்கள் நினைக்கவில்லையா?

என் விதண்டாவாத நண்பர் அண்மையில் ஒரு கேள்வி கேட்டு அந்த ’ஆஹா’வைக் கெடுத்தார். நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? என் பங்குக்கு இதோ!

அவர் கேட்ட கேள்வி இதுதான். ”ஒரு கோழி சாப்பிடும் நெல் என்ன பெறும்? அதக் காப்பாத்த தோட்டை விட்டெறிஞ்சாங்கன்னா, அந்த நெல்ல அவங்க தோட்டவிட அதிகம் மதிச்சாங்கன்னு தானே அர்த்தம்? அப்ப அவங்க வாழ்ந்தது, பசியும் பட்டினியுமான வாழ்க்கையா? இல்ல செல்வச் செழிப்பான வாழ்க்கையா?”

அதுதானே? கொஞ்சம் யோசித்தபோது, நம்மிடையே காலங் காலமாக நிலவி வரும் - பிற சமூகத்தினரிடம் இல்லாத - சில பழக்கங்கள் நம் முன்னோரின் வாழ்க்கை நிலை குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன என்று தோன்றியது. ஒரு வகையில் அவை நமது வரலாற்றின் எச்சங்கள் என்பது எனது ஊகம். சில எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன்.

1. யாரிடம் பேசத் தொடங்கினாலும், ’நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டுத் தொடங்குவது உலக வழக்கம். தமிழர்கள் இருவர் பேசிக் கொண்டால், ’சாப்பிட்டாச்சா?’ என்ற கேள்வி தவறாமல் இரண்டாவதாக வரும். பல சமயங்களில், அந்தக் கேள்வியைக் கேட்குமுன் இது சாப்பாட்டு நேரமா என்று கூட யோசிக்க மாட்டோம். எனக்குத் தெரிந்த வரை இந்த வழக்கம் வேறு மொழி மக்களிடம் இல்லை.

பலர், குறிப்பாக கிராமத்து மக்கள் மூன்றாவது கேள்வி ஒன்றையும் கேட்பார்கள். அது ’அங்கெல்லாம் மழை பெய்ததா?’ என்பது. என் அம்மா கூட அப்படித்தான் தொலைபேசியில் கேட்பார். ஏன், ஏர் உழ ஆளைக் கூட்டிக்கிட்டு வரப் போறீங்களா? என்று நான் கிண்டல் செய்வதுண்டு.

இப்போது ஒரு வேளை இந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால், என் சிறு வயதில் வேற்று ஊர்க் காரர்கள் யாரைக் கண்டாலும், எங்கள் ஊர்ப் பெரியவர்கள் இந்த மூன்று கேள்விகளைக் கேட்காமல் விட மாட்டார்கள்.

இரண்டாவதாக, சமைத்த பாத்திரத்தை இரவில் காலியாக வைக்கக் கூடாது என்ற வழக்கம். பெரும்பாலான கிராமத்து வீடுகளில் இரவு, மறுநாள் காலை, மதியம் ஆகிய மூன்று வேளைகளுக்கும் சேர்த்து மாலையில் மட்டும்தான் சமைப்பார்கள். அதனால் சமைத்த பாத்திரம் காலியாக இருக்காது.

ஆனால், எப்போதாவது சாப்பாடு மீந்து போகாத சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு நான்கைந்து பருக்கைகளையாவது பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வைப்பார்கள்.

மூன்றாவதாக, பகலில் பிச்சை கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொன்னாலும், கிராமத்தில் இரவில் பிச்சை கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ’ராப்பிச்சைக்கு இல்லைன்னு சொல்லக் கூடாது’ என்று ஒரு பல மொழிபோல சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

இவை, காலங்காலமாக பசி - பட்டினியால் அவதியுற்ற ஒரு இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இந்த விளக்கம் உங்களுக்குச் சரி என்று தோன்றவில்லையா?

நல்லது.. திருமணப் பந்தி தொடங்கி தானே பரிமாறிக் கொள்ளும் நவீன விருந்துகள் வரை நம் மக்களில் படித்தவர்கள் / வசதியானவர்கள் கூட எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்..

நாம் கடந்து வந்த பாதை உங்களுக்குப் புரியலாம்.

நலமாய் முதுமை காண


நான் உடல் நலம் குறித்து பல நூல்களைப் படித்திருக்கிறேன். பொதுவாக அவற்றால் கிடைத்த பலன் காசும் நேரமும் வீணானதுதான்.

ஆனால், நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் டாக்டர் வெய்ல் எழுதிய ’நலமாய் அகவை அடைதல்’ (வேண்டாம்.. ஆங்கிலத்திலேயே பெயரைத் தந்து விடுகிறேன். Healthy Aging by Dr. Andrew Weil MD) ஒரு நல்ல புத்தகம். உங்களுக்கும் பயன்படக் கூடும் என்பதால், அதைப் பற்றி சில வார்த்தைகள்.

டெல்லி புத்தகச் சந்தையில் எதேச்சையாக அதைக் கண்டேன். புத்தகத்தின் அட்டையில் அவர் - 8 Weeks to Optimum Health: A Proven Program for Taking Full Advantage of Your Body's Natural Healing Power - என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதியவர் என்று இருந்தது.

அப்படிப் பட்ட குறிப்பு எப்போதும் எனக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தும். உடனே, இந்தப் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு அந்த ’எட்டு வார’ புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால், மீண்டும் இந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்தேன். நான் ‘Sample' பார்த்த பக்கங்கள் எனக்குக் பிடித்திருந்ததால் வாங்கிக் கொண்டேன்.

படிக்க ஆரம்பித்த பின், அதன் மொழி அழகும் கருத்து அழகும் - என்னைக் கீழே வைக்க விடவில்லை. முதுமையைக் கேலிப் பொருளாகச் சித்தரித்து அதிலிருந்து தப்பிக்க வழி சொல்லும் புத்தகங்கள் மத்தியில், டாக்டர் வெய்ல் முதுமை அடைவதைப் பற்றி மகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

குறிப்பாக அவர் சுமார் 7,200 ஆண்டுகள் வாழ்ந்து வருவதாகக் கருதப் படும் ஜப்பானிய மரம் பற்றி சொல்லும் போது, என் பள்ளிக் கால வாழ்க்கையின் ஒரு அம்சமாக மனதில் பதிந்துள்ள மருத மரத்தின் நினைவு வந்தது எனக்கு. (அதைப் பற்றி பின் ஒரு சமயம் எழுதுவேன்).

படிப்பதற்கு மிகவும் சுவையாக எளிய ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ள நூல் எந்த வயதினரும் படிக்க ஏற்றது. நாற்பதைத் தாண்டும் எவரும் அவசியம் படிக்க வேண்டும்.

’உடல் நலம் நமக்கு மிக முக்கியமானது; அதை மருத்துவரை மட்டுமே நம்பி விட்டுவிட முடியாது’ என்பது என் எண்ணம்.

அதிலும் பெரும்பாலான மருத்துவர்களின் அறிவு மிகவும் மேம்போக்கானது; இல்லையென்றால், பல இதய நோய் நிபுணர்களே மாரடைப்பால் இறப்பார்களா? மருந்து கம்பெனிகள் சொல்லும் மருந்துகளை கேள்வி எதுவும் கேட்காமல் நோயாளிகளுக்குக் கொடுத்து விட்டு பணம் பார்ப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த மருத்துவம். சில சமயங்களில் நோயாளி குணமடையலாம். சாதாரண நோயோடு டாக்டரிடம் போனதில் அகால மரணத்தைத் தழுவிய பலரை நான் அறிவேன்.

இந்த நிலையில் டாக்டர் வெய்ல்-இன் கருத்துகள் படிக்கத் தகுந்தவை. அவர் வயது முதிரும் போது எதிர் கொள்ளும் உடல், மன ரீதியான சிக்கல்களை அறிவியல் பூர்வமாக விளக்குகிறார். இதைப் படித்தவர்கள் முதுமையின் அழகை மேலும் உணர்ந்து வாழ்வார்கள் என நம்புகிறேன்.

இந்தச் செய்தி முழுமை பெற வேண்டும் என்பதற்காக இந்த நூலின் உட்பிரிவுகளை கீழே தருகிறேன்.

PART ONE: The Science and Philosophy of Healthy Aging
1. Immortality
2. Shangri-Las and Fountains of Youth
3. Antiaging Medicine
4. Why We Age
5. The Denial of Aging
6. The Value of Aging
7. Interlude: Jenny

PART TWO: How to Age Gracefully
8. Body I: The Ounce of Prevention
9. Body II: The Anti-inflammatory Diet
10. Body III: Supplements
11. Body IV: Physical Activity
12. Body V: Rest and Sleep
13. Body VI: Touch and Sex
14. Mind I: Stress
15. Mind II: Thoughts, Emotions, and Attitudes
16. Mind III: Memory
17. Spirit I: Unchanging Essence
18. Spirit II: Legacy

படியுங்கள். மகிழுங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

மதமும் ஆன்மீகமும்

இன்னமும் மதம் குறித்த கேள்விகள் நம்முள் எழுப்பும் உணர்வுகள் எனக்கு வியப்பாக இருக்கிறது.

20-25 வயதில் நண்பர்களுடன் வெளியில் சாப்பிடப் போன சமயங்களில், அவரவர் விருப்பத்துக்கு வாங்கி சாப்பிட மாட்டோம். குழுவில் யாராவது ஒருவர் சொல்வதையே அனைவரும் சாப்பிட வேண்டும். யாராவது தனி விருப்பம் தெரிவித்தால் மற்றவர் மனம் வருந்தும். மத விஷயத்தில் நாம் இன்னும் அந்த நிலையில்தான் இருக்கிறோம்.

சிந்திக்கும்போது, மதம் குறித்த கேள்விகளை உணர்ச்சி வயப் படாமல் விவாதிக்கும் பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. நான் நம்புவதை நீங்களும் நம்ப வேண்டும். இன்று இல்லை என்றால் என்றாவது என் வழிக்கு வந்து விடுவீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

Religion, Spirituality என்ற இரண்டையும் மத நம்பிக்கை என்று கொண்டு குழம்புவது தமிழ்ச் சூழலில் பொதுவானது.

நட்டு வைத்த கல்லுக்குள் (மண், செம்பு, பித்தளை, ஐம்பொன்) கடவுள் குடியிருப்பதாக நம்பி, அவரைத் திருப்தி செய்ய சுற்றி வருவது, நெய் பால், பழம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது, துதி பாடுவது, தீ மிதிப்பது, அலகு குத்ததிக் கொள்வது, உயிர்ப் பலி கொடுப்பது, மொட்டை போட்டுக் கொள்வது, மண் சோறு திண்பது முதலான அறிவுக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்வதையே நாம் மதம் என்று நினைத்துக் கொள்கிறோம். இவற்றைச் செய்யாதவர்கள் அல்லது வெறு வகைகளில் செய்பவர்கள் ’நாம்’ என்ற வட்டத்துக்குள் வர நாம் உடன் படுவதில்லை. பல நேரங்களில் அவர்களை நாம் எதிரிகளாகவே பார்க்கிறோம்.

மதம் என்பது ஒரு நிருவணம் என்பதும், இதனால் பலனடைவோர் நட்டம் அடைவோர் உண்டு என்பதும், சமூக ஏற்றத் தாழ்வுகள் கடவுளின் பெயராலும் வேதம், புராணம், இதிகாசம், ஆகமம் என்று சொல்லப் படுகின்ற புனித நூல்களின் துணையோடும் கட்டமைக்கப் பட்டிருக்கிறன என்பதும் நம் கவனத்துக்கு வருவதில்லை.

கடவுள் என்பதின் மேல் நாம் கொள்ளும் குருட்டு நம்பிக்கைதான் இத்தைய கட்டுக்கள் தொடர்வதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் நாம் உணர்வதில்லை.

இன்று உலகம் முழுவதும் மனிதன் அடைகின்ற துன்பங்களுக்கு அவனது மத நம்பிக்கையும் அதன் காரணமாக சக மனிதன் மேல் அவன் கொள்ளும் விருப்பு வெறுப்புகளுமே என்பதும் உணரப் படுவதில்லை.

கோவில் உண்டியலில் காசை - பொன்னை - பொருளைப் போடுவதால் கடவுள் அகம் மகிழ்வார் / வரம் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் ஆச்சரியத்தைத் தருகிறது.

இந்த உலகம் - ஏன் அண்டம் பேரண்டங்களும் கூட - அவனால் படைக்கப் பட்டது என்று நம்புகிறவர்கள், அவன் படைத்த தங்கத்தில் மில்லியனில் ஒரு பகுதிக்கும் பொறாத ஒரு துணுக்கை, நெய்யை, பாலை, பழத்தை - அவனுக்குத் தந்துவிட்டு அதற்க்காக கடவுள் தான் செய்யும் தவறுகளை எல்லாம் மன்னிப்பார் என்றும் நாம் பெறத் தகுதி இல்லாத நன்மைகளை நமக்குச் செய்வார் என்றும் நினைப்பது சரியா?

மதம் என்பது Spirituality என்று கொள்ளப் படுமானால் எனக்கு பெரிய குறை ஒன்றும் இல்லை. நான் புரிந்துகொண்டிருக்கும் வகையில் அது நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்கள், இயற்கை, இந்த உலகம், அண்டம் முதலியவற்றைப் பற்றியும் சிந்திப்பதும் அந்த சிந்தனை வழி நாம் வாழ வகுத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையும் என்றே நினைக்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால், கேள்வி கேட்காதே! இப்படித்தான் நீ வாழ வேண்டும். இதுதான் கடவுளுக்குப் பிடித்தது என்று சொல்வது மதம்.

விடை காண முடியாத் கேள்விகளைக் கேட்டு, மனதைப் பக்குவப் படுத்தியும் tentative-ஆக, உத்தேசமாக வாழும் வழியைச் சொல்வதும் Spirituality.

While I do not subscribe to any religion, I am always open to spiritual questions.